இல்லற இணையர்களிடம் அன்றாட வாழ்வில் அன்னியோன்னியம் இருக்கிறதா எனப் பேராசிரியை ஒருவரிடம் அலைபேசியில் வினவினேன். அய்யய்யோ என்று அதிர்ச்சியான அவர், “அவ்வார்த்தை மிகப் பெரியது; ‘கருவிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கனிவுகூட மனைவிகளுக்குத் தரப்படுகிறதா?’ என்று கேளுங்கள்” என்றார். தான் அறிந்த நபர்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவலங்களைச் சிறுசிறு கதைகளாகக் கூறினார்.
ஆணாதிக்கம், சாதி, வர்க்கம், மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படை அலகான குடும்பம் என்கிற நிறுவனம், திருமணம் என்ற சங்கிலித் தொடர் செயலால் நிலைநிறுத்தப்படுகிறது. காதல் என்பது இந்தச் சங்கிலித் தொடரைத் துண்டிக்கிறது. காரணங்கள் இன்றியும், கணக்குகளற்றும், முன்நிபந்தனை இன்றியும், சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒன்றுபட்டும், முரண்பட்டும் எதிர்பாலினத்திடமும் தன்பாலினத்திடமும் ஏற்படுகின்ற இயல்பான ஈர்ப்பு காதலாகப் பரிணமிக்கிறது.