குன்னூர்: குன்னூரில் நேற்று இரவு பெய்த மழையால் பனிக்கு கருகி வந்த காய்கறிகளும், தேயிலை செடிகளும் புத்துயிர் பெற்றுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பெய்வது வழக்கம். இருப்பினும் கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மழை குறைவாகவே பெய்துள்ளது. இதற்கிடையே நீலகிரியில் மார்கழி மாதத்தின் போது பனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. தமிழ் மாதமான ‘தை மாதத்தில் தரை நடுங்கும் குளிர் இருக்கும்’ என்பார்கள். அதேபோல் மார்கழி மாதத்திற்கு பின் பனியின் தாக்கம், குளிர் அதிகரித்து காணப்பட்டது.
காலநிலைக்கு ஏற்றவாறு நீர் பனியும், உறைப்பனியும் மாறி, மாறி கொட்டி வந்த நிலையில், மலை தோட்ட காய்கறிகளும், தேயிலை செடிகளும் படிப்படியாக பனியால் கருகி வந்தது. இதனால், விவசாயிகள் பெரும்பாதிப்பை சந்தித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்த்திராத வகையில் நேற்று இரவு குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளாகன காட்டேரி, அருவங்காடு, வண்டிச்சோலை போன்ற பகுதிகளில் மழை பொய்தது. இதனால், பனியால் கருகிய வந்த மலைத்தோட்ட காய்கறிகளும், தேயிலை செடிகளும் புத்துயிர் பெற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் காலையில் விவசாயத்திற்கு செல்லும் விவசாயிகளுக்கு ஏதுவாக சூரிய ஒளி வந்ததால் ஆர்வத்துடன் பணிகளுக்கு சென்றனர்.
The post குன்னூரில் நள்ளிரவு திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.