குன்னூர் : குன்னூர் அருகே பர்லியார் பகுதியில் காட்டு யானைகள் நீரோடையில் தண்ணீர் குடித்து தாகத்தை போக்கிய காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமவெளி பகுதியில் போதிய மழையில்லாதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் வெயிலின் தாக்கம் மற்றும் உணவுத்தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் 9 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டு இருந்தன.
இந்த யானைகள் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதன்பின்னர் கடந்த சில நாட்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தன. தற்போது, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலா சீசன் தொடங்க உள்ளது.
இதனால் மீண்டும் குன்னூர் பகுதிக்கு காட்டு யானைகள் தொடங்கியுள்ளன. அதன்படி ஒரு குட்டியுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் மலைப்பாதையான பர்லியார் வனப்பகுதியில் உள்ள நீரோடை பகுதியில் முகாமிட்டுள்ளது. நீரோடையில் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் குடித்து தாகத்தை போக்கியது. யானை கூட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கள் விரட்டும் பணியில் குன்னூர் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து, காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post குன்னூர் அருகே பர்லியார் பகுதியில் யானைகள் கூட்டம் நீரோடையில் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த காட்சி appeared first on Dinakaran.