வங்க மொழி எழுத்தாளர் நிருபமா தேவியின் ‘அன்னபூர்ணிகா மந்திர்’ என்ற நாவல் பல்வேறு மொழிகளில் அப்போது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நாவலை மலையாளத்தில் நாடகமாக உருவாக்கினார்கள். அதைத் தமிழில், ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் டி.கே.சி சகோதரர்கள் நாடகமாக மாற்றி நடத்தி வந்தனர். இந்த நாடகத்துக்கு அண்ணா, ‘குடியரசு’ இதழில் அற்புதமான விமர்சனம் ஒன்றை எழுதினார். மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தை ‘குமஸ்தாவின் பெண்’ என்று பெயர் மாற்றி திரைப்படமாக்கினர்.
நாடகத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஜெமினி பிலிம்ஸ் எஸ்.எஸ்.வாசன், அதில் நாயகியாக நடித்த நடிகையையே, சினிமாவிலும் நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ‘நடிகை’ அல்ல, நடிகர்தான்’ என்றதும் அவருக்கு ஆச்சரியம். அதில் பெண் வேடமிட்டு நடித்தவர் பின்னர் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் புகழடைந்த ஏ.பி.நாகராஜன்.