கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில் வசிக்கும் சித்ரா-வடிவேல் தம்பதியினருக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளியாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 2014-15ம் ஆண்டில் பணி ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பசுமை வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு பில் வழங்க தாமதமாகி வந்ததால் மேற்கொண்டு கட்டிடம் கட்ட பணம் இல்லாததால் பணியை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கு வந்த அதிகாரிகள், உங்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை இன்னும் ரத்து செய்யப்படவில்லை. அதனால் மீதமுள்ள பணியை முடித்தால் உங்களுக்கு வழங்க வேண்டிய தொகைகள் அனைத்தையும் உடனடியாக வழங்குகிறோம் என்று உறுதியளித்துள்ளனர். இதையடுத்து, அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பிய சித்ரா-வடிவேல் தம்பதியினர் தெரிந்தவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி வீட்டை முழுமையாக கட்டி முடித்து விட்டு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
கட்டி முடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு சென்ற அதிகாரிகள் இன்று வரை அவர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகையை தரவில்லை. சித்ரா மற்றும் அவரது கணவர் வடிவேல் ஆகியோர் பில் தொகையை கேட்டு சுமார் ஒரு வருடகாலமாக கிணத்துக்கடவில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுநாள் வரை பில் தொகை கிடைக்கவில்லை.
இது குறித்து பயனாளி வடிவேல் கூறியதாவது: எங்களிடம் பணம் இல்லாததால்தான் வீடு கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டோம். பல வருடம் கழித்து நேரில் வந்த அதிகாரிகள், வீட்டை முழுமையாக கட்டி முடியுங்கள். உங்களுக்கு கொடுக்க வேண்டிய பில் தொகையை உடனே கொடுத்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். அதை நம்பி நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி வீட்டை விட்டு முடித்து விட்டு பில் கேட்க சென்றால், ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் நாங்கள், வட்டிக்கு பணம் வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளோம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் எங்களுக்கு கொடுக்க வேண்டிய பில் தொகையை கொடுக்கவில்லை என்றால், குடும்பத்துடன் சென்று மாவட்ட கலெக்டர் அலுவகத்தின் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
The post குரும்பபாளையம் கிராமத்தில் பசுமை வீட்டிற்கு பில் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : கூலி தொழிலாளி கவலை appeared first on Dinakaran.