நாகர்கோவில்: “திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலைதான் உள்ளது. குழந்தைகள் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சினையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும் அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். மூன்றாவதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியைத் தந்தார். ஆனால், அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.