கூடலூர்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் இருந்து கூடலூரை அடுத்துள்ள மேல்கூடலூர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் தனியார் வேன் ஒன்றில் கூடலூர் நோக்கி வந்தனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் தவளை மலை கொண்டை ஊசி வளைவை கடந்து திரும்பியபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 250 அடி தூரம் உள்ள இடது பக்க பள்ளத்தில் பாய்ந்தது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். ஓட்டுநருக்கு அதிக காயம் ஏற்பட்டது. மேலும் 3 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. வேன் மரத்தில் மோதி நின்றதால் 22 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோட்டத்தில் பாய்ந்த சுற்றுலா பேருந்து : கேரள மாநிலம் கண்ணணூரில் இருந்து 17 சுற்றுலா பயணிகளுடன் ஊட்டிக்கு தனியார் பேருந்து வந்தது. அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று பகல் 12 மணி அளவில் தேவர் சோலை-கூடலூர் இடையே பாடந்துறை பகுதியில் சுற்றுலா பேருந்து வந்தபோது எதிரில் வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர்,வலதுபுறம் பேருந்தை திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்து சாலை ஓர தடுப்பை உடைத்துக்கொண்டு தேயிலைத் தோட்டத்திற்குள் பாய்ந்தது. பள்ளமான அந்த பகுதியில் 50 அடி தூரத்திற்கு மேல் இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து கால்வாயில் சிக்கி நின்றது. இதனால் அதில்வந்த 17 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
The post கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் சென்றபோது 250 அடி பள்ளத்தில் பாய்ந்தது வேன்: 22 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.