கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே அரசு அனுமதியின்றி ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 27 உணவகங்களுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில் நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், சின்ன காலனி, அம்பேத்கார் நகர், காந்தி நகர், வலம்புரிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கண்டிகையிலிருந்து வண்டலூர் நோக்கி செல்லும் சாலை ஓரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வகையான உணவு கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைக்கு அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலர் உணவு அருந்த வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இக்கடைக்கு முறையாக அப்ரூவல் வாங்காமலும், ஊராட்சி நிர்வாகத்திற்கு வரி கட்டாமலும் மேற்படி பகுதியில் இயங்கி வந்த 27 உணவக கடைகளால் அரசுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் இழப்பீடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அரசு அனுமதியின்றி ஒரே இடத்தில் 27 உணவக கடைகள் அமைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் நோட்டீஸ் அளித்தும் பதில் அளிக்காததால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி நல்லம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழியர்கள் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர், ஒரே இடத்தில் அமைந்துள்ள 27 உணவக கடைகளை பூட்டி அதன் மீது நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதிரடியாக சீல் வைத்தனர். இதனால் நல்லம்பாக்கம் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு; அரசு அனுமதியின்றி இயங்கிய 27 உணவகங்களுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.