சென்னை: ‘கூட்டணி ஆட்சி இல்லை’ எனும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து அமித் ஷா முடிவெடுப்பார்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் இன்று சென்னை – தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். பாஜக தொண்டர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கமலாலயத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு, கட்சி நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இமயமலையில் ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு, கமலாலயம் வந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரனை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.