புதுடெல்லி: கைலாஷ் கெலாட் ஒரு சுதந்திரமான மனிதர். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். முன்னதாக, ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், “பாஜக மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. கைலாஷ் கெலாட்டுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் சிபிஐ மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இனி அவர் பாஜக சொல்படி நடப்பார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 'மோடி வாஷிங்மெஷின்' செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள்” என்று குற்றம் சாட்டினார்.