*தினமும் 11 லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிக்க திட்டம்
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சியில், கொசவம்பட்டி உரக்கிடங்கில் ரூ.24 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 11 லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்து, விவசாயத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 8 மாதங்கள் ஆகிறது.
நாமக்கல் நகராட்சியாக இருந்த போது, கடந்த 10 ஆண்டுக்கு முன், அதனுடன் கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி, பெரியப்பட்டி, அய்யம்பாளையம், நல்லிபாளையம் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது.
அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மற்றும் நகரில் விடுபட்ட பகுதிகளுக்கு, ரூ.194 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்துகிறது. பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கியது.
இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள், மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது பணிகள் விரைவு படுத்தப்பட்டு, 3 குழுவினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், தினமும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை இணைப்பு கால்வாய் திட்டத்தையொட்டி, மாநகராட்சி கொசவம்பட்டி உரக்கிடங்கில் ரூ.24 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக புதியதாக பொறுப்பேற்றுள்ள சிவக்குமார், மாநகரில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொசவம்பட்டி உரக்கிடங்கு பகுதியில் நடைபெற்று வரும் பணியை ஆய்வு செய்த கமிஷனர் சிவக்குமார், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியின் தற்போதைய நிலை குறித்து, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், அவர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களை கேட்டு கொண்டார்.
அதனை தொடர்ந்து, அழகுநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், பொன்விழா நகரில் சாலை பராமரிப்பு பணிகள், கருப்பட்டிபாளையத்தில் பாதாள சாக்கடை பணிகளை கமிஷனர் நேரில் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல் மாநகராட்சி கொசவம்பட்டியில் பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்தின் கீழ், ரூ.24 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 11 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முழுமையாக முடியும்.
அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை, விவசாயத்திற்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1000 லிட்டர் தண்ணீர் ரூ.2க்கு விற்பனை செய்யப்படும். விவசாயத்திற்கு ஏற்ற வகையில், அந்த தண்ணீர் இருக்கும். பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,’ என்றனர்.
The post கொசவம்பட்டி உரக்கிடங்கில் ரூ.24 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.