கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இவற்றை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானல் நகர், புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை குடியிருப்புகள், சுற்றுலா தலங்களில் சர்வ சாதாரணமாக உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
காட்டு மாடுகளின் தாக்குதலில் இதுவரை பலர் படுகாயமடைந்துள்ளதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அருகேயுள்ள ஆனந்தகிரி, தந்திமேடு, காந்திபுரம், செயிண்ட் மேரீஸ் சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் முகாமிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகளின் அட்டகாசம் அதிகரிப்பு: வனத்திற்குள் விரட்ட கோரிக்கை appeared first on Dinakaran.