மூணாறு: கோடை சுற்றுலா சீசனை முன்னிட்டு, மூணாறில் மலர் கண்காட்சி மே 1 முதல் மே 10 வரை நடைபெறவுள்ளது. தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் கேரள மாநிலம், மூணாறில் ஆண்டுதோறும் கோடை சுற்றுலா சீசனில் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட சுற்றுலாதுறை சார்பில் மலர் கண்காட்சி மே 1 முதல் மே 10 வரை நடைபெறும். மூணாறு அருகே கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் 15 ஏக்கர் பரப்பளவில் உள்,வெளிநாடுகளில் காணப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை பூக்கள் உள்பட 1,500 வகை வண்ணப்பூக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் யானை, டைனோசர், காட்டெருமை உட்பட்ட விலங்குகளின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இதய வடிவில் செல்பி பாய்ன்ட், சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள், இசை நீரூற்று போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 வசூலிக்கபடுகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பூங்காவை பார்வையிடலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
The post கோடை சீசனை முன்னிட்டு மூணாறில் மே 1 முதல் மலர் கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.