* பரிசல் சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் உற்சாகம்
சேலம்: கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூர் மற்றும் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஏற்காட்டில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நிரம்பியது. வார விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டிற்கு கார், வேன், டூவீலர்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் திரும்பிய இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் காணப்பட்டது. லேடீஸ் சீட், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், குகை கோயில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து இடங்களில் மக்கள் பொழுதை கழித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து, இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக கடைகளில் வியாபாரம் களைகட்டியது. மேலும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. மேலும், அங்குள்ள ஓட்டல்களிலும் வியாபாரம் களைகட்டியது.
அதே போல், மேட்டூர் அணை பூங்காவிற்கு, ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர்.
பின்னர், அணை பூங்காவிற்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில், நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, மெயின்அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், குடும்பத்துடன் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி சென்றனர். மேலும், மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தலைகளாக காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மேலும், மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது.
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில், இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரவில் குளிரும், காலையில் சில்லென்று குளிர் காற்றும் வீசுகிறது. விடுமுறையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குறிப்பாக சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐடி, நிதி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஏராளமான டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். மழையின் காரணமாக கணிசமாக தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசிபெரியசாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்தனர். தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குடும்பத்தினர், குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
The post கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காடு, கொல்லிமலையில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.