புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இனி கோயில்-மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பது தவறு என்றும் அவர் கண்டித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் சம்பலின் ஜமா மசூதி வழக்கை தொடர்ந்து பல இடங்களில் கோயில்-மசூதி விவகாரங்கள் கிளம்பி வருகின்றன. ராஜஸ்தானின் அஜ்மீரிலுள்ள காஜா ஷெரீப் தர்கா உள்ளிட்ட பல முஸ்லிம் தலங்கள் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களில் கோயில்கள் இடித்துக் கட்டப்பட்டிருப்பதாக சில இந்துத்துவா அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்குகளால் இந்து – முஸ்லிம் நல்லுறவில் பாதிப்புகள் உருவாகும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.