கோவை : கோவை பேரூர் கோயில் குடமுழுக்கில் வேள்வி குண்ட நிகழ்வில், தமிழில் சைவ மந்திரம் பாட அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை, பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. குட முழுக்கை முன்னிட்டு வேள்விகுண்ட நிகழ்வுகளில் தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதி கோரி கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அனுப்பி இருந்தார்.
மேலும் மனுவை பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட கோரி சுரேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “வேள்வி ஆசிரியர் என்ற முறையில், வேள்வி குண்ட நிகழ்வுகளில் தமிழில் சைவ மந்திரம் பாட தகுதி பெற்றுள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக வேள்வி குண்டம் மற்றும் குடமுழுக்கு பூஜைகளை செய்து வந்துள்ளேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post கோவை பேரூர் கோயில் குடமுழுக்கில் தமிழில் சைவ மந்திரம் பாட அனுமதிக்க கோரி மனு : அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்!! appeared first on Dinakaran.