சென்னை: கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை நிறுவப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்களின் சீரார்ந்த தலைமையில் கடந்த நான்காண்டுகளில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகப் பல்வேறு எழுச்சிவாய்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் பார் போற்றும் வகையில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
தாய்மொழி, தாய்நாடு என்று பெருமிதமாக சொல்லும் வண்ணம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் 2010-ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அந்த மாபெரும் விழாவினை எந்நாளும் நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாகவும் கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும்.
2.தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையினை 1.தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும், 2. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும், 3. எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 3 கோடியே 90 இலட்சத்து 60 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
3. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
4. தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட வைப்புத் தொகை வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சிக் கழகம் 1946-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல், ஆண்டுதோறும் தமிழ் விழா நடத்துதல், தமிழில் வெளியாகும் சிறந்த நூலுக்குப் பரிசு வழங்கி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்கேற்பத் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கத் தேவைப்படும் தமிழ்த் தரவக உருவாக்கம், சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் போன்ற திட்டப் பணிகளைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும் தொடர்ந்து தொய்வின்றிச் செயற்பட உதவும் வகையில் வைப்புத் தொகையாக ரூபாய் 2 கோடி வழங்கப்படும்.
5. தமிழறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும்.
தமிழ்நாடு அரசால் இதுவரை 189 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு அவரது மரபுரிமையருக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 10 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 1 கோடியே 1 இலட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
6. சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலத்தில் அமைந்துள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும்.
‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்’ என்று முழங்கியவரும் தாய்த்தமிழைக் காக்க அரும்பாடுபட்டவருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்களைப் போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான துள்ளம் என்கின்ற துண்டலம் கிராமத்தில்
ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கமும், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அங்குள்ள நூலகமும் மேம்படுத்தப்படும்.
7. புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்குக் கலையரங்கு அருகில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்.
புதுதில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
8. மொழிபெயர்ப்பாளர் க.ரா.ஜமதக்னி அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத்தூண் நிறுவப்படும்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட திரு.க.ரா.ஜமதக்னி அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத்தூண் நிறுவப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 25 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
9. சங்க காலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
புறநானூற்றுப் பாடலை இயற்றி நல்லிசைப் புலமை மெல்லியலார் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை நிறுவப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
10. கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
கவிக்கோ என்னும் அடைமொழியால் தமிழகத்திலும், தமிழறிந்த அயலகங்களிலும் அறியப்படுபவர் அப்துல் ரகுமான் அவர்கள். 1999-ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கவிதைக்குரிய சாகித்திய அகாதெமி விருது, 1989-இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழன்னை விருது, தமிழ்நாடு அரசு வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். பால்வீதி என்ற கவிதைப் படைப்பின் மூலம் தம்மை ஒரு புதுமைப் படைப்பாளியாக உலகிற்கு அறிவித்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
1. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
தமிழ் மீது அளப்பறிய பற்றுக்கொண்டிருந்த மணவை முஸ்தபா அவர்கள் நவீன அறிவியல் போன்ற துறைகளிலும் தமிழ் தடம் பதிக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட அரிய ஆளுமை ஆவார். பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தை தமிழில் கொண்டு வருவதற்கான குழுவைத் தலைமையேற்று வழி நடத்தியவர். அறிவியல் தமிழ் கருத்தரங்கை முதன்முதலில் நடத்தியவர். அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், கணினி ஆகிய துறை சார்ந்த கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டு அறிவியல் தமிழ் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றிய அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும்.
தமிழ் மொழி மற்றும் அதன் சிறப்புகளை அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலக அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று திட்டங்களாக நிறைவேற்ற, திங்கள்தோறும் கலந்தாய்வுக் கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘அறிஞர்களின் அவையம்’ எனும் திட்டத்தின் வழி நடத்தப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 42 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ சிறப்புப்பொழிவு நடத்தப்படும்.
தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம், விழுமியங்கள் ஆகியவற்றின் சிறப்பினை ஆய்ந்திடும் நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாக, தமிழ்ப் படைப்புகளை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை வாயிலாக, திங்கள்தோறும் தகைசால் தமிழறிஞர்கள்/ ஆய்வாளர்களைக் கொண்டு ‘தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ எனும் பொருண்மையில் சிறப்புப் பொழிவு நடத்தப்படும். இந்நிகழ்வானது இணைய வழியாக தமிழாய்வு மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 20 இலட்சம் வழங்கப்படும்.
4. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையும் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.2,000/- வீதம் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 18 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு 2025-2026 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூபாய் 12 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
The post கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை நிறுவப்படும்: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு!! appeared first on Dinakaran.