கோவை: கோவையில் நேற்று இரவு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இன்று (டிச.2) காலை மாநகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் ‘ரெயின் கோட்’ அணிந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவையில் நேற்று (டிச.1) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து மாநகரில், மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகத்தினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுரங்கப் பாதைகளின் கீழ் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்ற மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், கோவையில் நேற்று மதியத்துக்கு பின்னரே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.