‘‘எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சியை எப்போதும் எதிர்த்துதான் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.’’ – இதை சொன்னவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். மிகவும் படித்தவர், திறமையானவர். சிறந்த எழுத்தாளர். ஐ.நா.வில் செயலாளர் பொறுப்பு வகித்தவர். நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இடம்பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் பிரபலமானவர். தற்போது இவருக்கும் கட்சி மேலிடத்துக்கும் உரசல்.
‘‘பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால், இந்தியர்களுக்கு நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. நாட்டின் நலன் கருதி இதை சொல்கிறேன்’’ என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘இடதுசாரி அரசின் பொருளாதார கொள்கைகளால் கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது’’ என்றார். இதனால் கட்சி மேலிடத்தின் நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.