சென்னை: மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்ரகிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப் பெருந்தகை கூறுகையில், “சுதந்திர இந்தியாவில் மகளிர் தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராடி வெற்றி கண்ட நாளை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அவர்களது உரிமைகளை பாதுகாப்பதில் காங்கிரஸ் பேரியக்கம் எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்திய பெருமை காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும். மகளிர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது.