நியூயார்க்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை விரட்டும் விவகாரத்தில் டிரம்ப் அரசுக்கு எதிராக நடிகை செலினா கோம்ஸ் கண்ணீர் விட்டு கதறினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மெக்ஸிகோ போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைதும் செய்யப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையை தாண்டி அமெரிக்காவிற்குள் ஊடுருவி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள். இந்நிலையில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை கடந்த சில நாட்களில் மட்டும் 956 பேரை கைது செய்துள்ளது.
அவர்களில் கடந்த சனிக்கிழமையன்று 286 பேரும், வெள்ளிக்கிழமை 593 பேரும், வியாழக்கிழமை 538 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகள் மீது தொடர் நடவடிக்கையால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முன்னாள் அதிபர் ஜோ பிடனின் ஆட்சிக்காலத்தில் 15 லட்சம் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர். ஆனால் தற்போது டிரம்ப் அரசில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடுமையான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அகதிகளாக அமெரிக்காவிற்குள் கடந்த 1970ம் ஆண்டுவாக்கில் நுழைந்த மெக்ஸிகோ பெற்றோருக்கு பிறந்த நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் (32) வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ‘மிகவும் வருந்துகிறேன்… எமது நாட்டு (மெக்ஸிகோ) மக்கள் அனை வரும் தாக்கப்படுகிறார்கள்; குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்; ஆனால் என்னால் முடியாது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதாவது செய்வதற்காக எல்லா வகையிலும் முயற்சிப்பேன்; சத்தியம் ஏதாவது செய்கிறேன். வெளிப்படையாக எவ்வித பாரபட்சமின்றி மக்களை ஒடுக்குவது சரியல்ல’ என்று கண்ணீர் மல்க வீடியோவில் தெரிவித்துள்ளார். நடிகை செலினா கோம்ஸ், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக பல்வேறு வகையிலும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விவகாரம்; டிரம்புக்கு எதிராக கண்ணீர் விட்டு கதறிய நடிகை: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.