திருச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம், திருச்சி தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வக்கீல்கள் சட்டத்திருத்த வரைவு மசோதா-2025-ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.26 முதல் மார்ச் 1 வரை வக்கீல்கள் கோர்ட் பணியில் இருந்து புறக்கணிப்பது என்றும், ஜனநாயக விரோத சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும் என்று கோரியும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையோ வக்கீல்களையோ இந்தியாவில் எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி பிப்.26 அன்று அனைத்து கோர்ட் வாயில் முன்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வக்கீல்கள் சட்ட திருத்த வரைவிலுள்ள ஆட்சேபங்களை பிப்.28க்குள் தெரிவிக்க வேண்டும் என்று குறைந்த நாட்கள் அவகாசம் கொடுத்து சட்டத்தை அவசரகதியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.
ஒன்றிய அரசு இதை கைவிட்டு வக்கீல்களின் கோரிக்கையை ஏற்று, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.28 அன்று அனைத்து கோர்ட் வாயில் முன்பாக உண்ணாவிரதம் நடத்தப்படும். இந்த கோரிக்கை குறித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சேர்மன் மன்னன் குமார் மிஸ்ராவையும் நேரில் சந்திப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஜாக் பொதுக்குழு அறிவித்துள்ள அனைத்து போராட்டங்களுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களும், அமைப்புகளும் மற்றும் வக்கீல்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் பங்கேற்றனர்.
The post சட்டதிருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற கோரி 26ம் தேதி முதல் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சங்க பொதுக்குழு முடிவு appeared first on Dinakaran.