சென்னை: சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, நள்ளிரவு 2 மணியளவில் எம்பிக்களின் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது.
இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம் என கூறினார்.
அதை தொடர்ந்து தமிழக சட்டபேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இப்போராட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் சிவிஎம்பி எழிலரசன் , பரந்தாமன் உள்ளிட்டோர் பதாகைகளை ஏந்தி ”இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே” என்ற கண்டன முழக்கம் எழுப்பினார்கள். இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே என திமுக எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
The post சட்டப்பேரவை வளாகத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.