சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டிய ஆளுநர், தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழக அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து நிறைவேற்றி காட்டியிருக்கிறார். சட்டப்பேரவையை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சி பிரதிநிதிபோல ஆர்.என்.ரவி செயல்படுவது அவர் வகித்து வரும் அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றதல்ல.