ஓமலூர்: அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். நாட்டில் நிலவும் பிரச்னைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது வீணாக பழி சொல்கின்றனர்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தோம். அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய உள்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலுக்காக பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருக்கிறது. அதற்குள்ளாக இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்.
இவ்வாறு அவர் கூறினார். தேமுதிக பொருளாளர் சுதீஷ், தங்கள் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக உறுதி அளித்திருந்ததாக கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, இதுகுறித்து இன்ெனாரு நாளில் விரிவாக பதிலளிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
The post சட்டமன்ற தேர்தலுக்காக பாஜவுடன் கூட்டணி அதிமுக அணியில் மேலும் பல கட்சிகள் இணையும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.