சென்னை: “சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொல்லப்பட்டதையும், கனிமவள கொள்ளை மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஜகபர் அலி கொலைக்கு காரணமான பெரிய முதலைகளை உடனடியாக காவல் துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விரைவாக தண்டனை பெற்று தர வேண்டும்” என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டவிரோத குவாரி முறைகேடுகளை, ஊழல்களை எதிர்த்து போராடி வந்த புதுகோட்டையை சேர்ந்த ஜகபர் அலி கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் அவர் தொடர்ந்து சட்டவிரோத குவாரி ஊழல் முறைகேடுகளை எதிர்த்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் போராடி வந்துள்ளார் என்பதும், அப்படிபட்ட ஒரு மிகப் பெரிய சட்டவிரோத கனிமவள கொள்ளையை குறித்து புகார் கொடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பது அரசின் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை காட்டுகிறது.