உடல் பருமன் இருந்தால்தான் சர்க்கரை நோய் வரும் என்று நினைக்கிறீர்களா? இனி, அந்த நினைப்பைக் கைவிட்டுவிடுங்கள். ஒல்லியாக இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரலாம் என்கிறது மருத்துவ உலகம். சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற உலகளாவிய சர்க்கரை நோய் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நோய்க்கு ‘ஐந்தாம் வகை சர்க்கரை நோய்’ (Type 5 diabetes) என்று பெயரிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் வகைகள்: உடலில், கணையத்தில் இன்சுலின் துப்புரவாகவே சுரக்கவில்லை என்றால், முதலாம் வகை சர்க்கரை நோய் (Type 1 diabetes) வருகிறது. இது குழந்தைகளுக்கு வருகிற சர்க்கரை நோய். மாறாக, இன்சுலின் குறைவாகச் சுரந்தாலோ, சுரந்த இன்சுலின் செயல்படாமல் போனாலோ இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 diabetes) வருகிறது. இது பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வருகிறது.