புதுடெல்லி: "சாலை விபத்துகள் குறித்து நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது என் முகத்தை மறைத்துக் கொள்ளவே முயல்வேன்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், சாலை போக்குவத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றபோது சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று தான் இலக்கு நிர்ணயித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் வியாழக்கிழமை நடந்த சாலை விபத்துகள் குறித்த விவாதத்தில், கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி, "விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதை மறந்து விடுங்கள். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. சாலை விபத்துகள் குறித்து நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது என் முகத்தை மறைத்துக் கொள்ள முயல்வேன். இந்தியாவில் மனித நடத்தைகள் மேம்படுவதற்கு பல விஷயங்கள் மாற வேண்டும், சமூகம் மாற வேண்டும், சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும்.