சென்னை: தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால், மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸார், சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
வீடியோ பரவல்: இதற்கிடையே தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் அவதூறாகப் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பான புகார் சென்னை காவல்துறைக்கு சென்றது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.