சென்னை: “சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையம் கண்துடைப்பு. இதன்மூலம் மக்கள் வரிப்பணத்தை முதல்வர் வீணடிக்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021-ஆம் ஆண்டிலிருந்து, 2023-ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.