சென்னை: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிப்பதால் அதை தமிழக அரசு ஏற்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கைவினை கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, இன்று நாம் தொடங்கி வைக்க இருக்கக்கூடிய இந்த கலைஞர் கைவினைத் திட்டம் என்பது, சமூகநீதியை – சமநீதியை – மனிதநீதியை – மனித உரிமை நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டம். இந்த திட்டத்தின் சிறப்புகளை சொல்வதற்கு முன்னே, ஏன் இந்த திட்டத்தை உருவாக்கினோம் என்ற அரசியல் பின்னணியை நான் சொல்ல விரும்புகிறேன்… ஒன்றியத்தை ஆளக்கூடிய பாஜக அரசு கடந்த 2023ம் ஆண்டு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? “விஸ்வகர்மா திட்டம்!” 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி, ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள்.
நம்மை பொறுத்தவரைக்கும், எந்த திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம் – அப்படியான திட்டம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த திட்டத்தின்கீழ் ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்து கொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி நாம் கடுமையாக எதிர்த்தோம்.
அதுமட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. 18 வயது என்பது ஒரு மாணவர் உயர்கல்விக்காக கல்லூரிக்கு செல்கின்ற வயதா, இல்லை, குடும்பத் தொழிலையே செய்யவேண்டும் என்று தள்ளிவிடுகின்ற வயதா? படிப்பை விட்டு வெளியே செல்கின்ற மாணவர்களையும் மீண்டும் கல்வி சாலைக்குள்ளே அழைத்துக் கொண்டு வருவதுதான் ஒரு அரசின் கடமையே தவிர, அவர்களை படிப்பை விட்டு வெளியேற்றுவதும், அதுவும் குடும்பத் தொழிலையே செய்யவேண்டும் என்று சொல்வதும் கிடையாது.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலமாக ஸ்கூல் முடித்த எல்லோரும் உயர்கல்விக்கு போவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் பாடுபடுகிறோம். ஆனால், ஒன்றிய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. நாம், ‘நான் முதல்வன்’ திட்டத்தில், எதிர்கால உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான திறன் பயிற்சிகளை கொடுத்து, நம்முடைய குழந்தைகள் பெரிய, பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் வேலை செய்யவேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால், பாஜக என்ன நினைக்கிறது? குடும்பத் தொழிலில் பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்க கூடாது என்று நினைக்கிறது. அதுவும், சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதுவும், 1950-களிலேயே குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு இதை அனுமதிக்குமா? அந்த உணர்வோடுதான், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதில் நான் குறிப்பிட்டது…..
* முதல் மாற்றம்
விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கின்ற கட்டாய நிபந்தனையை நீக்கி, தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றவேண்டும்.
* இரண்டாவது மாற்றம்
விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 35-ஆக உயர்த்த வேண்டும்.
* மூன்றாவது மாற்றம்
கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும்.
ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று ஒன்றியத்தில் இருக்கக்கூடிய எம்எஸ்எம்இ துறையின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது. ஆனால், நம்முடைய கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு செல்கின்ற வயதில், குடும்பத் தொழிலை பார்த்தால் போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். இந்த திட்டத்தில், 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தில் மானியம் கிடையாது.
இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை கைவினை கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாரையும் விலக்காமல், சமூகப் பாகுபாடு பார்க்காமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமான கைவினைஞர்கள், விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்கின்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
ஒரு காலத்தில், அப்பா பார்த்த தொழிலைத்தான் பிள்ளையும் பார்க்கவேண்டும் என்று குலத்தொழில் முறை இருந்தது. அந்த அடிப்படையில், தொடக்கத்திலேயே நான் சொன்னது போல, அப்பா தொழிலை மகனுக்கு கற்றுத்தர குலக்கல்வி முறையை ராஜாஜி ஆட்சி காலத்தில் உருவாக்கினார்கள். இதற்கு எதிராக பெரியாரும், அண்ணாவும் போராடினார்கள். காமராசர் தான் அந்த முறையை திரும்பப் பெற்றார். இத்தனை ஆண்டுகள் ஆகியும், சிலருடைய மனதிலிருந்து அந்த பழமைவாத எண்ணம் இன்னும் போகவில்லை என்பதன் அடையாளம்தான் விஸ்வகர்மா திட்டம்.
அதை எதிர்த்து நம்முடைய திராவிட மாடல் அரசு சமூகநீதி திட்டமாக, கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதுதான் காலத்தின் வெற்றி. இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி. போராடும் இடத்தில் இருந்து, நாம் மாற்றுத் திட்டத்தை உருவாக்குகின்ற வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த அடிப்படையில்தான் இதுபோன்ற திட்டங்களைத் தீட்டுகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எம்எஸ்எம்இ நிறுவனங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வளர்த்தெடுத்திருக்கிறார். அவை பெருந்தொழில்களுக்கு துணையாக இருந்து நாட்டின் ’இன்க்ளூசிவ்’ மற்றும் ‘ஆல்-ரவுண்ட்’ சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது. உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால், மக்கள் வேலை தேடி தொலைதூரங்களுக்கு இடம் பெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் சேர்ந்து, நிதியுதவி பெற்று தொழில் தொடங்கும் பயனாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, செல்வம், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சிறு தொழில் ஆணையர் நிர்மல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிப்பதால் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு ஏற்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.