ஜெட்டா: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று சேர் கரணை ரூ.2.40 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ளது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சன் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இதனிடையே கேன் வில்லியம்சன், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கியது. முதல்நாளில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 3.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் நியூஸிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், க்ளன் பிலிப்ஸ் மற்றும் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், ரஹானே, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோரை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.