மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் சுற்றில் அந்த அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறுமா? கேப்டன் தோனி என்ன சொல்கிறார்? உள்ளிட்டவற்றை பார்ப்போம்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008 சீசன் முதல் 2024 சீசன் வரையில் மூன்று முறை, அதவாது 2020, 2022, 2024 என முதல் சுற்றான லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறி உள்ளது. 2016 மற்றும் 2017 சீசன்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் சிஎஸ்கே விளையாடவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 10 இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டமும், 5 முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.