சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கட்டுகுடிபட்டி கிராமத்தில் செல்வவிநாயகர் – மகாமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக கிராம கண்மாய் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.
மஞ்சுவிரட்டில் கட்டுகுடிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முதலில் கோயில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடித்து அடக்கினர். மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் சிறிய அளவில் காயமடைந்தனர். இந்த போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
The post சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம் appeared first on Dinakaran.