சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இவை பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இரண்டு உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த ஸ்ரீ நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இந்நிலையில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், காலை 6.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவகைலாஷ் தீட்சிதர் கொடியை ஏற்றினார். இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து, ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வருகிற 24ம் தேதி வெள்ளி சந்திரபிறை வாகன வீதி உலா, 25ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 26ம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 27ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச் சான்) நடைபெறுகிறது. 28ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 29ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 30ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெறுகிறது. வரும் ஜூலை 1ம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
ஜூலை 2ம் தேதி அதி காலை சூரிய உதயத்துக்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு ராஜசபையில் மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன. 3ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா உற்சவமும், 4ம் தேதி தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா: கொடி ஏற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.