சென்னை: சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோறாயமாக ரூ. 8.57 கோடி) பரிசு வழங்கப்படும் என சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா கருத்தரங்கின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின், அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.