டமாஸ்கஸ்: சிரிய அதிபர் பஷார் அல் – ஆசாத்து தலைநகரை விட்டு விமானத்தில் தப்பியோடியிருக்கும் நிலையில், டாமஸ்கஸைக் கைப்பற்றி விட்டதாக கிளர்ச்சிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளனர். தலைநகரை விட்டு அரசுப்படைகள் வெளியேறி விட்டதால், டமாஸ்கஸ் நீண்டகால ஆட்சியாளரான ஆசாத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சி படையினர் தெரிவித்தனர்.
பஷார் அல் ஆசாத் தப்பியோடிவிட்டார். ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து டமாஸ்கஸ் விடுவிக்கப்பட்டது என்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 24 வருடங்களாக சிரியாவை ஆட்சி செய்த அதிபர் பஷார் அல் ஆசாத், விமானத்தில் ஏறி அடையாளம் தெரியாத இடத்துக்கு சென்று விட்டதாக சர்வதேச செய்தி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விட்டதாக ராணுவத் தளபதி அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.