மதுரை: சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்மலா தேவி மனு செய்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் கடந்தாண்டு ஏப். 30ல் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கோர்ட் விடுதலை செய்துள்ளது.
அவர்களுக்காகத்தான் நான் மாணவிகளிடம் செல்போனில் பேசினேன். அவர்களை விடுதலை செய்து எனக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. இந்த தண்டனையை ரத்து செய்தும், வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலையை எதிர்த்து, சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து பட்டியலிடுமாறு உத்தரவிட்டு பிப். 25க்கு தள்ளி வைத்தார்.
The post சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி நிர்மலாதேவி மனு appeared first on Dinakaran.