சீன படைகள் இந்திய மண்ணில் ஊடுருவியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்காக அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சபாநாயகரிடம் பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ராகுல் தனது உரையில் கொஞ்சமும் கூச்சமின்றி வரலாற்று மற்றும் ஆதாரப்பூர்வமான உண்மைகளை திரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், தாய்நாட்டை கேலி செய்து நமது குடியரசின் மாண்பை குலைக்கும் செயலையும் செய்துள்ளார். இ்ந்திய மண்ணில் சீன படையினர் ஊடுருவியுள்ளதாக தவறான தகவலை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களை ராகுல் அளிக்க வேண்டும். அளிக்க தவறினால் அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்பதே பாஜக எம்பிக்களின் விருப்பம். இவ்வாறு துபே அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.