சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை ராணுவத்தை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியதாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.