ஆவடி: ஆவடி அருகே சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பள்ளி சீருடையுடன் அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டிட பணியில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொசவன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மாணவர்களை அழைத்து கட்டுமானப் பணிக்கான செங்கற்களை சுமக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து செங்கற்களை சுமந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவகாரம் குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘பள்ளியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, ‘பி.டி.’ வகுப்பு நேரத்தில், அவர்கள் விருப்பப்பட்டு சில வேலைகள் செய்கின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், பள்ளியின் உள்ளே புகுந்து செல்லும் பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஒருவர் அவதூறு பரப்பும் விதமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்’ என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சுற்றுச்சுவர் அமைப்பதற்காக சீருடையுடன் கட்டிட பணியில் ஈடுபடும் அரசுப்பள்ளி மாணவர்கள்: வீடியோ வெளியாகி பரபரப்பு appeared first on Dinakaran.