பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் குரங்குகள், சுற்றுலா பயணிகள் கொடுக்கும் பாட்டில் தண்ணீரை குடித்து தாகம் தணிக்கும் நிலை காணப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, கடத்தி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஒகேனக்கல் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. காவிரியில் நீர்வரத்து சரிந்து ஓடை போல் மாறி வருவதால், அங்குள்ள விலங்கினங்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், குரங்குகள் தண்ணீர் தேடி ரோட்டிற்கு படையெடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது. பென்னாகரம்- ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்நோக்கி காத்திக்கும் குரங்குகள், அவர்கள் கொடுக்கும் பாட்டில் தண்ணீரை குடித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன. எனவே, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
The post சுற்றுலா பயணிகள் கொடுக்கும் பாட்டில் தண்ணீருக்காக காத்திருக்கும் குரங்குகள்: ஒகேனக்கல்லில் பரிதாபம் appeared first on Dinakaran.