சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 12ம் வகுப்புக்கான தேர்வு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 88.39%. விஜயவாடா மண்டலம் 99.60% சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 97.39% சதவீத தேர்ச்சியை பெற்று சென்னை மண்டலம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில் 17 மண்டலங்களில் இருந்து தேர்வு எழுதிய மாணவ மாணவியரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 19299 பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 4367 மாணவ மாணவியர் பதிவு செய்திருந்த நிலையில் 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்காக நாடு முழுவதும் 7330 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வில் பங்கேற்றோரில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 88.39 சதவீதம். கடந்த ஆண்டைவிட இது 0.41 சதவீதம் அதிகம். கடந்த 2024ம் ஆண்டில் மொத்த தேர்ச்சி வீதம் என்பது 87.98 ஆக இருந்தது.
வெளிநாடுகளில் வாழும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 21825 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 21782 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 20694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 95.01 சதவீதம். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு தேர்வு எழுதியோரில் மாணவர்கள் 85.12 சதவீதமும், மாணவியர் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டில் மாணவர்கள் 91.52%, மாணவியர் 91.64% பெற்றிருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 17 மண்டலங்களில் தேர்வு எழுதிய மாணவ மாணவியரின் தேர்ச்சி முடிவுகளின்படி விஜயவாடா மண்டலம் 99.60 சதவீத தேர்ச்சியை பெற்று நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் 99.32 சதவீதம் பெற்று இரண்டாம் இடமும், சென்னை 97.39 சதவீதம் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளன. பிரயாக்ராஜ் மண்டலம் 79.53 சதவீத தேர்ச்சியை பெற்று கடைசியில் இடம் பிடித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் வாரியாக தேர்ச்சி வீதம்: ஜவகர்லால் நேரு வித்யாலயா99.29%, கேந்திர வித்யாலயா 99.05%, எஸ்டிஎஸ்எஸ் 98.96%, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 91.57%, அரசுப் பள்ளிகள் 90.48%, தனியார் பள்ளிகள் 87.94% சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. சிபிஎஸ்ஐ தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை, அதிகாரப்பூர்வ இணையதளமான results.cbse.nic.in, cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாக முடிவுகளைத் தெரிந்துக்கொள்ளலாம்.
இவற்றை தவிர, UMANG செயலி, DigiLocker (டிஜி-லாக்கர்), ஐவிஆர் அழைப்பு (IVRS – Interactive Voice Response System) ஆகியவை உதவியுடன் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மீண்டும் தேர்வு எழுத வேண்டியவர்கள் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு அனைத்து பாடங்களிலும் 90சதவீதம் முதல் 95 சதவீதம் வரையில் பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கைைய பொருத்தவரையில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பெற்றவர்கள் 111544 பேர்(6.59%), 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 24867(1.47%) பேர்.
மாற்றுத் திறனாளி மாணவ மாணவியரில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் அனைத்து பாடங்களிலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள் விவரம்: 90 சதவீதத்துக்கும் மேல்மதிப்பெண் பெற்றவர்கள் 290 பேர். 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 55 பேர்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தவிர மீண்டும் தேர்வு எழுத வேண்டியவர்கள் என்று 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
The post சென்னை 3வது இடத்தை பிடித்தது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் மொத்த தேர்ச்சி வீதம் 88.39% appeared first on Dinakaran.