சென்னை: சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த 72 வயதான பெண்மணி ஒருவர் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் மும்பை போலீஸ் போல் டிஜிட்டல் கைது மோசடி மூலமாக ரூ.4.67 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் மும்பை போலீஸ் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து புகார்தாரின் பெயரில் போதை பொருட்கள், போலி பாஸ்போர்ட்டுகள், ஏடிஎம் கார்டுகள், புலித்தோல் கொண்ட பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதுசம்மந்தமான விசாரணைக்கு 2 மணி நேரத்தில் மும்பை வரும்படியும் கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய புகார்தாரர் சந்தேக நபர்களிடம் வீடியோகால் மூலமாக பேசி தன்னுடைய வங்கி கணக்கு பற்றிய விபரங்களைகொடுத்துள்ளார். சந்தேக நபர்கள் புகார்தாரருடைய வங்கி கணக்கில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து பல மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளனர்.
புகார்தாரரும் தனது நிரந்தர வைப்புத் தொகையினை சந்தேக நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற பின்னர் சந்தேக நபர்கள் செல்போன் தொடர்புகளை துண்டித்துவிட்டனர். இதுசம்மந்தமாக புகார்தாரர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின் போது 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் வீட்டிலிருந்து ஹவாலா பணம் ரூ.52,68,000/- மற்றும் வழக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள் அனைவரும் கனம் 11வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர். சைதாப்பேட்டை அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.52,68,000/- பாதிக்கப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பிற எதிரிகளை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப. அவர்கள் எந்தவொரு மாநில காவல் துறையோ, CBI, TRAI போன்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகளோ இதுபோன்று ஸ்கைப், வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து டிஜிட்டல் கைது செய்து விசாரணை செய்வதில்லை என்றும் பொது மக்கள் அதை உண்மை என்று நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இத்தகைய சைபர் குற்றங்கள் மூலமாக ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
The post சென்னை அபிராமபுரத்த்தில் மும்பை போலீஸ் போல் ஏமாற்றி ரூ.4.67 கோடி டிஜிட்டல் கைது மோசடி: 15 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.