சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.நீதிபதி சத்திய நாராயண பிரசாத் (56)கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிபதியாக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1969ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி தஞ்சாவூரில் பிறந்த நீதிபதி சத்திய நாராயண பிரசாத் பள்ளி படிப்பை வேலூரிலும் இளங்கலை பட்டப்படிப்பை சென்னையிலும் முடித்தார். சட்டப்படிப்பை டெல்லியில் முடித்து வழக்கறிஞராக கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பதிவு செய்தார். பின்னர் வழக்கறிஞராக தனது தொழிலை தொடங்கிய சத்திய நாராயண பிரசாத் சென்னை, கோவை மாநகராட்சிகள், வங்கிகள், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றின் வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சத்திய நாராயண பிரசாத் தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நீதிபதிகள், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் மறைந்த நீதிபதிக்கு காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நீதிபதி மரணம் காரணமாக உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் செயல்படாது என்று உயர் நீதிமன்றம் நேற்று காலை அறிவித்தது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவு:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய தனது தந்தையின் வழியில் சட்டத்துறையை தேர்வு செய்து, வழக்கறிஞராகி, அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர். வழக்கறிஞராக நீண்ட அனுபவத்துடன் 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
நீதித்துறையில் மேலும் தனது சிறந்த பங்களிப்பை, சாதனைகளை படைக்க வேண்டிய தருணத்தில் நிகழ்ந்து விட்ட அவரது எதிர்பாராத மறைவு நீதித்துறைக்கும் – நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பாகும். தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாருக்கு காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்படும். சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார்: அரசு சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை appeared first on Dinakaran.