சென்னை: சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோரிக்ஷாக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோரிக்ஷாக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான கியூஆர் குறியீட்டை உருவாக்கியுள்ளது.
இந்த கியூஆர் குறியீடு 88,859 ஆட்டோரிக்ஷா / வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், SOS பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது ஆட்டோரிக்ஷா தற்போது நிற்கும் இடம் மற்றும் ஆட்டோவை பற்றிய முழுமையான விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும்.
கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதிசெய்யும் வசதியும் இதில் உள்ளது. கியூஆர் கோடின் முக்கிய நன்மை: பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய கியூஆர் குறியீடு உறுதி செய்கிறது.
இதன்மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு கியூஆர் குறியீடு ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ஆர்.சுதாகர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* முதல்வரே ஒட்டினார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்த திட்டத்தை ஆட்டோவில் ஏறி, டிரைவர் இருக்கைக்கு பின்புறம் கியூஆர் குறியீடு ஸ்டிக்கரை ஓட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மற்ற வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்டர் ஓட்டும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
* அனைத்து வாடகை வாகனத்திலும் கியூஆர் குறியீடு ஒட்ட ஏற்பாடு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: ரேபிடோ மற்றம் ஊபர் போன்ற செயலியில் புதிதாக ஒரு ‘காவல் உதவி’ வசதியை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறோம். அந்த வசதி மூலம் பயணிகள் ஏதாவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல் உதவியை பயன்படுத்தினால் போதும், உடனே ஒரு அவசர செய்தி காவல்கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். இதற்காக தனியாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கியூஆர் குறியீடு, சென்னையில் மட்டும் மொத்தம் 88 ஆயிரத்து 859 வாடகை வாகனங்கள் இயங்குகிறது. அந்த வாகனங்களின் விபரங்களை போக்குவரத்து துறையிடம் இருந்து பெற்று, ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக ஒரு கியூஆர் குறியீடு உருவாக்கி உள்ளோம். அந்த ‘கியூஆர்’ குறியீட்டில் அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த க்யூ ஆர் குறியீடு பொருத்தப்பட்ட வாகனத்தில் செல்லும்போது, ஏதாவது பெண்களுக்கு பாதுகாப்புயின்மை உணர்ந்தால், அந்த கியூஆர் குறியீட்டை சம்பந்தப்பட்ட பெண் அவர்களின் செல்போனில் உள்ள கேமராவில் ஸ்கேன் செய்தால், அதில் ஒரு ‘எஸ்ஓஎஸ்’ இருக்கிறது. அதை க்ளிக் செய்த உடனே அவசர செய்தி சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும்.
இந்த தகவல்களை வைத்து உடனே காவல்கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் உடனே சம்பந்தப்பட்ட வாகனம் செல்லும் பகுதியில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்பி, அந்த பயணிகளோடு உரையாடி என்ன பிரச்னை என்று கேட்டு தீர்வு காணுவார்கள். அனைத்து வாடகை வாகனங்களிலும் இந்த கியூஆர் கோடு ஒட்ட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உறுதி செய்வோம். இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
The post சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் 88,859 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.