சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் 123-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இந்தியாவின் நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இதில் ஜோர்டன் வான் பாரஸ்ட் 51-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான வி.பிரணவ், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அவாண்டர் லியாங் 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 109-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.