சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கடந்த 19ம் தேதி ஏசி மின்சார ரயில்சேவை தொடங்கியது. இதில் பயணம் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதனை குறைக்க வேண்டும் எனவும், பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஏசி ரயில் நேர அட்டவணை நேரம் குறித்தும், இயக்கம் குறித்தும் பயணிகள் கருத்து தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பயணிகள் தங்களின் கருத்தை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் மூலம் அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் பயண கட்டணத்தை குறைக்க வேண்டும், ரயில் இயக்க நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், பல்வேறு பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாலை 3.40 மணிக்கு இயக்கப்படும் ஏசி மின்சார ரயிலை, வெயில் அதிகமாக உள்ள நேரமான மதியம் 2 அல்லது 2.30 மணிக்கு மாற்றம் செய்வதற்கு முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அடுத்த 5 மாதங்களில் மற்ற ஏசி புறநகர் மின்சார ரயில் சேவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளின் மற்றொரு கோரிக்கையான ஏசி மின்சார ரயிலுக்காக கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயண கட்டணம் நிர்ணயத்தை தெற்கு ரயில்வே முடிவு செய்ய முடியாது எனவும் பயண தூரத்தை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவைக்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் சூழல் இருப்பதன் காரணமாக தெற்கு ரயில்வே இவ்வாறு தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 10 கி.மீ. தொலைவிற்கு 35 ரூபாயும், அதிகபட்சமாக 150 ரூபாய் என்ற கட்டண முறையே தொடரும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை: தெற்கு ரயில்வே நிர்வாகம் உறுதி appeared first on Dinakaran.