சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் கலைஞர் நூற்றாண்டு புறநகர் பேருந்து முனையத்தின் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் KCBT மொபைல் செயலியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவருமான சேகர்பாபு தொடங்கி வைத்தார். போக்குவரத்தை நவீனமாக்கும் நோக்கத்துடன் தொடங்கிய இந்த முயற்சி பயணிகளுக்கு மெருகூட்டப்பட்ட மற்றும் சீரான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது. பயணிகள் வசதியை மாற்றும் செயலி: KCBT மொபைல் செயலி பயணத்தை எளிமையாக்கவும், அணுகுமுறையை மேம்படுத்தவும், பயணியர்களுக்கு தனிப்பட்ட உதவியை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Android மற்றும் iOS தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த செயலி, பயணத்தை எளியதும் பலனளிப்பதுமானதாக மாற்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த செயலியின் முக்கிய அம்சங்கள், பயணியின் தற்போதைய இடத்திலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு புறநகர் பேருந்து முனையத்திற்கு திசை மற்றும் வழிகாட்டியாக விளங்குகிறது. டிஎன்எஸ்டிசி மற்றும் எஸ்இடிசி பேருந்துகளின் நிறுத்தம் விவரங்கள், செல்லும் இடங்கள், நேரம் மற்றும் பயண நேரம் வழங்கப்படுகிறது. எம்டிசி பேருந்து எண்கள், பாதைகள் மற்றும் நிறுத்தங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்குகிறது.
டிஎன்எஸ்டிசி மற்றும் எஸ்இடிசி பேருந்துகளுக்கான நடைமேடை மற்றும் தளம் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள் மற்றும் அவற்றின் இடங்கள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பயணிகள் அறியச் செய்கிறது. பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியின் மூலம் கருத்துகள் அளிக்கவும் மற்றும் புகார்கள் பதிவு செய்யவும் செயலியின் தரத்தை மேம்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு உதவி எண்ணை உடனடியாக அணுகலாம். அத்துடன், அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கான கேள்வி-பதில்கள் பகுதி மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறலாம்.
செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது, எனவே அனைவருக்கும் எளிதில் அணுக முடியும். KCBT மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டார், ஆப்பில் ஆப் ஸ்டோரில் இலவசமாக இப்பொழுது பதிவிறக்கம் செய்யலாம். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், தலைமை திட்ட அமைப்பாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய மொபைல் செயலி தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார் appeared first on Dinakaran.