மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய வளாக பகுதிகளில் தற்போது கொசுப் புகை மற்றும் மருந்து அடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அங்கு கொசு தொல்லை அதிகரிப்பால் சமீபகாலமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு நிறுத்தப்பட்டு உள்ள கொசுப் புகை மற்றும் மருந்து அடிக்கும் பணிகளை மீண்டும் துவங்கி, கொசு தொல்லையை தடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையம் உள்பட பல்வேறு வளாகப் பகுதிகளில் சமீபகாலமாக கொசு தொல்லை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உள்நாட்டு விமானநிலைய டெர்மினல் 1 வருகை பகுதியில், கொசு தொல்லை அதிகளவு உள்ளது. மேலும், பன்னாட்டு முனையமான டெர்மினல் 2, மற்றொரு உள்நாட்டு முனையமான டெர்மினல் 4 பகுதிகளிலும் அதிகளவில் கொசு தொல்லை உள்ளன. எனினும், 2வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிகளில் கொசு தொல்லை குறைவாக உள்ளது.
இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வரும் விமான பயணிகளை, விமானநிலையத்தில் கொசுக்கள்தான் அதிகளவில் வரவேற்பது போல் உள்ளது. இந்த கொசுக்கடி வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய அனுபவமாகவும், அவர்களின் முகங்களை சுளிக்க வைக்கிறது. பொதுவாக, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகள் மற்றும் ஹால்களில் அதிகளவு கொசு தொல்லை இருக்காது எனக் கூறுவர். எனினும், சென்னை விமானநிலைய குளிர்சாதன பகுதிகள் நேர்மாறாக உள்ளது. இங்கு வரும் பயணிகளுக்கு ஒருசில மணி நேரம் மட்டுமே கொசுக்கடி அவதி. அவர்கள் விமானத்தில் ஏறி சென்றபிறகு கொசுக் கடியிலிருந்து தப்பிவிடுகின்றனர்.
எனினும், சென்னை விமானநிலைய வளாகத்தில் தொடர்ந்து வேலைபார்க்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் சிஐஎஸ்எப் படை வீரர்கள் நாள்தோறும் கொசுக்கடி தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும், இங்கு பகல் நேரங்களைவிட இரவு நேரங்களில்தான் கொசுத் தொல்லை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை விமானநிலைய வளாகப் பகுதிகளில் இந்தளவு கொசுக்கள் பரவியிருப்பதற்கு, அங்கு அழகுக்காக வைக்கப்பட்டு உள்ள குரோட்டன்ஸ் செடிகள் மூலம் கொசுக்கள் அதிகளவில் பதுங்கியிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்களை கடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்குமுன் சென்னை விமானநிலைய வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு கொசுக்களை விரட்ட புகை அல்லது ஸ்பிரே மூலம் மருந்து அடிப்பது வழக்கம். எனினும், சமீபகாலமாக மாதத்தில் ஒரு நாள்கூட கொசுப்புகை மற்றும் ஸ்பிரே மூலம் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெறுவதில்லை எனக் கூறப்படுகிறது. இப்பணிகளை விரைவில் துவக்கி, விமானநிலைய வளாகங்களில் கொசு தொல்லையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விமானநிலைய ஆணைய இணையளதளத்தில் ஏராளமான பயணிகள் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு உங்களது புகாரை பதிவு செய்து கொண்டோம். கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து அடிக்கும் பணிகளை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அறிவுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று விமானநிலைய அதிகாரிகள் பதில் மட்டுமே கூறி வருகின்றனர். எனினும், சென்னை விமானநிலைய வளாகத்தில் கொசுக்கடி தாங்க முடியவில்லை என்று பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
The post சென்னை விமானநிலையத்தில் கொசு தொல்லை அதிகரிப்பால் பயணிகள் அவதி: தடுப்பு பணி மேற்கொள்ள வலியுறுத்தல் appeared first on Dinakaran.